அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி - 3 பேர் பலி

இந்த விபத்தில் மூன்று கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் ஐந்து பைக்குகள் சேதமடைந்தன.
அமராவதி:
ஆந்திராவின் அனகப்பள்ளி மாவட்டம், லங்கேலபாலம் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-16 பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் கடந்த திங்கட்கிழமை இரவு லாரி பைக்குகள் மற்றும் கார்கள் நின்றுகொண்டிருந்தன. அப்போது அதே சாலையில் வந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது லாரி சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்களை மோதியது. இந்த விபத்தில் பரிதாபமாக மூன்று பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
கஜுவாகாவிலிருந்து அனகப்பள்ளி நோக்கிச் சென்ற லாரி, வாகனங்கள் மீது மோதிய பின்னர், ஒரு கனரக வாகனம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் மூன்று கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் ஐந்து பைக்குகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர்கள் அனகப்பள்ளி மண்டலம், ரெபாகாவைச் சேர்ந்த பச்சிகுரா காந்தி (52), கொனதல அச்சையா நாயுடு (55), விசாகப்பட்டினம் மாவட்டம், அகனம்புடியைச் சேர்ந்த அனகப்பள்ளி, ரிங் ரோடு பகுதியைச் சேர்ந்த யெரப்பாடு (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துக்கு டிரைவரின் அலட்சியமே காரணம் என்று முதற்கட்ட ஆய்வு தெரிவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.






