மகா கும்பமேளா 2025: சுற்றுலா பயணிகளுக்கு ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி


மகா கும்பமேளா 2025: சுற்றுலா பயணிகளுக்கு ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 13 Jan 2025 4:07 AM IST (Updated: 13 Jan 2025 5:13 AM IST)
t-max-icont-min-icon

மகா கும்பமேளாவில் ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக விளங்கும் 'மகா கும்பமேளா' ஜனவரி 13-ந்தேதி(இன்று) தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டுள்ளது. பிரயாக்ராஜ் நகருக்கு சாலை, ரெயில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் வந்து சேர்வதற்கான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் தேவைக்காக 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 1.6 லட்சம் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 40 புதிய மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் திரிவேணி சங்கமம் பகுதியில் வானில் சுமார் 2 ஆயிரம் டிரோன்கள் மூலம் ஒளிக்காட்சி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவின் தொடக்க நாள் மற்றும் நிறைவு நாளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், மகாகும்பமேளாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் சவாரியின்போது மகாகும்பமேளா நடைபெறும் இடம் முழுவதும் சுமார் 8 நிமிடங்களில் சுற்றிக்காட்டப்படும் என்று உத்தர பிரதேச சுற்றுலாத்துறை மந்திரி ஜெய்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த ஹெலிகாப்டர் பயணத்திற்கு சுற்றுலா பயணிகள் www.upstdc.co.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், வானிலை நிலவரம் மற்றும் முன்பதிவு கோரிக்கைகளின் அடிப்படையில் ஹெலிகாப்டர் சவாரி தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story