மேற்கு வங்காளம்: மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

மாணவியை அந்த கும்பல் அருகில் உள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் மேற்கு வர்த்தமான் மாவட்டம் சோபாபூரில் தனியார் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் (வயது 23) எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு 2ம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில், மருத்துவ மாணவி நேற்று இரவு தனது ஆன் நண்பருடன் கல்லூரிக்கு அருகே உள்ள உணவகத்திற்கு உணவு சாப்பிட சென்றுள்ளார். உணவு சாப்பிட்டுவிட்டு இருவரும் கல்லூரிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, இருவரையும் 3 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்துள்ளது.
கல்லூரி அருகே சென்றபோது அந்த கும்பல் மாணவியின் ஆண் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளது. தாக்குதலை தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து, மாணவியை அந்த கும்பல் அருகில் உள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளது. அங்கு வைத்து இளம்பெண்ணை கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், மாணவியின் செல்போனையும் அந்த கும்பல் திருடியுள்ளது.மேலும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று மாணவியை அந்த கும்பல் மிரட்டியுள்ளது.
இதையடுத்து, அந்த கும்பலிடமிருந்து தப்பிய மாணவி, பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகிறது.






