மைக்ரோசாப்ட் விவகாரம்; பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது, தீர்வு காணப்படும் - மத்திய அரசு

மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் உலகம் முழுவதும் இன்று மதியம் முடங்கியது. விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களின் கம்ப்யூட்டர் திரையில் 'புளூ ஸ்கிரீன் ஆப் டெத்' (Blue Screen of Death) என்ற எரர் தோன்றியது. அதில், 'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக, விமான துறை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன. இந்தியாவில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விண்டோஸ் செயல்படாததால் விமானங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலகளாவிய விண்டோஸ் இயங்குதள பாதிப்பு தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்பில் உள்ளது. இந்த பிரச்சினைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது, விரைவில் தீர்வு காணப்படும். இந்திய கணினி அவசரகால பதில் குழு (CERT) தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசின் தொலைதொடர்பு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.