‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ உற்பத்தி, சேவை துறையில் ஊக்கம் ஏற்படுத்தும்: பிரதமர் மோடி

உலக வர்த்தகத்தில் 3-ல் ஒரு பங்கை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்யும் நோக்கில், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். குடியரசு தினத்திற்கான சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்ட அவர்களுக்கு முறைப்படி ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடி இன்று அவர்களுக்கு விருந்து அளித்து கவுரவப்படுத்தினார். இதனையடுத்து டெல்லியில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தங்களுடைய குழுவினருடன் இன்று மதியம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை முக்கிய இடம் பெற்றது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. இந்த நிலையில், ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என பெயரிடப்பட்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, வெளிப்படையான இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக இணைந்து இன்று அறிவித்தது.
இந்நிலையில், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பின்னர் பேசிய பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் இந்திய வருகை, வழக்கம்போல் நடக்க கூடிய தூதரக அளவிலான பயணம் கிடையாது. இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் படைப்பதற்கான முன்னறிவிப்பாக அவர்களின் வருகை அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த தடையற்ற மற்றும் வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் உற்பத்தி துறையில் ஊக்கம் ஏற்படுத்தும். சேவை துறையும் விரிவடையும். இந்த ஒப்பந்தம், ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், தொழிலதிபருக்கும் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நம்பிக்கையை ஊக்குவிக்கும் என்றார்.
140 கோடி இந்தியர்களுக்கும் மற்றும் கோடிக்கணக்கான ஐரோப்பிய மக்களுக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும். உலகளவிலான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 25 சதவீதமும், உலக வர்த்தகத்தில் 3-ல் ஒரு பங்கையும் இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.
ஐரோப்பாவுடனான இந்த ஒப்பந்தம் இந்திய வரலாற்றில் மிக பெரிய ஒப்பந்தம் என குறிப்பிட்ட அவர், ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தானியங்கி பாகங்கள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட இந்தியாவின் தொழில்சார்ந்த பொருட்களை, ஐரோப்பிய ஒன்றிய சந்தை எளிதில் அணுக இன்று வகை செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.






