4-வது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் ரத்து: பன்மடங்கு உயர்ந்துள்ள விமான டிக்கெட் விலை


4-வது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் ரத்து: பன்மடங்கு உயர்ந்துள்ள விமான டிக்கெட் விலை
x

இண்டிகோ விமான சேவை பாதிப்பு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த‌ விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் கடந்த சில தினங்களாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் கூறி, 'இண்டிகோ' நிறுவனம் தொடர்ந்து நுாற்றுக்கணக்கான விமானங்களை கடந்த மூன்று நாட்களாக ரத்து செய்து வருவதால், ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4வது நாளாக நூற்றுக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்தது. இன்று 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

டெல்லியில் 225 விமானங்கள், மும்பையில் 104 விமானங்கள், பெங்களூருவில் 102 விமானங்கள், ஐதராபாத்தில் 92 விமானங்கள், ஜெய்ப்பூரில் 34 விமானங்கள், புனேவில் 32 விமானங்கள், சென்னையில் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் விமான நிலையத்தில், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, விமான சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

விமானிகளுக்கான புதிய விதிமுறைகள், ஊழியர்கள் பற்றாக்குறை, மோசமான வானிலை, பயணிகள் நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், இண்டிகோ விமானங்கள் சிக்கலில் இருக்கும் சூழலில், உள்நாட்டு விமான சேவை வழங்கும் மற்ற விமான நிறுவனங்கள், விலையை பன்மடங்கு உயர்த்தியிருக்கின்றன.

பொதுவாக 7,000 ரூபாய் அளவில் இருக்கும் சென்னை டூ டெல்லி விமான டிக்கெட் இன்றும், நாளையும் 40,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் பல பயணிகள் டிக்கெட் விலையை கேட்டு திரும்ப சென்றனர். ஒரு சிலர் என்ன செய்வதென்று விமான நிலையத்திலேயே பரிதவித்து நின்றனர்.

இதனிடையே இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சரகம் அறிவித்துள்ளது. விமான நிறுவனங்களின் சேவைகளுக்கான புதிய விதிகளை டிஜிசிஏ வாபஸ் பெற்றது. இண்டிகோ விமான சேவை பாதிப்பு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த‌வும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான சேவைகள் ஓரிரு நாளில் நிலைமை சீராகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. DGCA உதவி எண்கள்= 011-24610843, 011-24693963, 096503-91859 உதவி எண்களை வெளியிட்ட‌து விமான போக்குவரத்து அமைச்சகம்.

1 More update

Next Story