பெண் டாக்டரின் ஹிஜாப்பை இழுத்து... மீண்டும் சர்ச்சையில் நிதிஷ் குமார்

கடந்த மே மாதத்தில், மரக்கன்று ஒன்றை அதிகாரி கொடுத்தபோது, அதனை விளையாட்டாக அவருடைய தலையில் நிதிஷ் குமார் வைத்த நிகழ்வும் சர்ச்சையானது.
பாட்னா,
பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, 10-வது முறையாக நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில், பாட்னா நகரில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹிஜாப் அணிந்திருந்த பெண் டாக்டர் ஒருவருக்கு சான்றிதழை வழங்கியபோது, அவரிடம், ஹிஜாப்பை நீக்குங்கள் என சைகை காட்டினார். அந்த பெண் அதனை கவனித்து செயல்பட முற்படுவதற்கு முன், பெண்ணின் வாய், கன்னம் தெரியும்படி அந்த பெண்ணின் ஹிஜாப்பை பிடித்து, கீழே இழுத்து விட்டார். மேடையில் இருந்த சிலர் சிரித்தபோது, துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, அவரை தடுக்க முயற்சித்தது வீடியோவில் வெளியானது.
இந்த வீடியோ பரவியதும், காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள கட்சிகள் அவரை கடுமையாக சாடியுள்ளன. அவருடைய மனநிலை முற்றிலும் பாதிப்படைந்து விட்டதற்கான சான்று இது என்றும் தெரிவித்தன. பெண்களுக்கு அதிகாரமளிப்போம் என கூறி விட்டு, பா.ஜ.க.வும், ஐக்கிய ஜனதா தளமும் என்ன வகையான அரசியலை செய்து வருகின்றனர் என அவர் தெளிவுப்படுத்தி விட்டார் என ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் அகமது கூறியுள்ளார்.
அவருடைய செயல் வெட்கக்கேடானது மற்றும் வெறுப்பூட்டுகிறது என்றும் காங்கிரஸ் சாடியுள்ளது. கடந்த காலங்களிலும் அவர் இதுபோன்று சில விசயங்களில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த மார்ச்சில் பாட்னா நகரில் தேசிய கீதம் இசைத்தபோது, சிரித்து கொண்டும், பேசியபடியும் காணப்பட்டார். இது கேமராவில் பதிவாகி இருந்தது. அவரை முதன்மை செயலாளர் தீபக் குமார் அமைதிப்படுத்தினார்.
இதேபோன்று, நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் கைகுலுக்க சென்றார். இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அவருடைய நடவடிக்கைகள் சர்ச்சையாகி இருந்தன.
எனினும், எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளை அவருடைய கட்சியும், கூட்டணியாக உள்ள பா.ஜ.க.வும் அவரை பாதுகாக்கும் வகையில் பேசினர். கடந்த மே மாதத்தில், மரக்கன்று ஒன்றை அதிகாரி கொடுத்தபோது, அதனை விளையாட்டாக அவருடைய தலையில் வைத்த நிகழ்வையும் எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கின.
இதேபோன்று கடந்த அக்டோபரில், நாடு முழுவதும் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு காணொலி காட்சி வழியே பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு பிரதமர் மோடி சான்றிதழ்களை வழங்கினார். இதில், பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் கலந்து கொண்டார்.
அப்போது ஒருவர் நிகழ்ச்சி விவரங்களை படித்து கொண்டிருந்தபோது, ஏறக்குறைய ஒரு நிமிடம் வரை, நிதீஷ் குமார் கைகளை கூப்பியபடி அமர்ந்து இருந்தார். அவ்வப்போது, கூப்பிய கைகளை லேசாக குலுக்கினார். பக்கவாட்டிலும் ஒருமுறை பார்த்து கொண்டார். ஒரு கட்டத்தில், லேசாக புன்னகை புரிந்தபடியும் காணப்பட்டார். சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவர் நடந்து கொண்ட விதம் சர்ச்சையானது. அவருடைய உடல்நலம் பற்றி கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியினர், பீகாரை அவரால் வழிநடத்தி செல்ல முடியுமா? என்றும் அப்போது கேட்டனர்.






