ஒருதலை காதல் மோகம்; கல்லூரி மாணவி மீது ஆள் வைத்து ஆசிட் வீசிய காதலர்

எனக்கு நீதி வேண்டும். அவர்கள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என மாணவி கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியின் முகுந்த்பூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் வடமேற்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் லட்சுமிபாய் கல்லூரி அருகே நேற்று சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் 2-ம் ஆண்டு மாணவியான அவர் சிறப்பு வகுப்புக்காக சென்றுள்ளார்.
அப்போது அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் இருந்து விலகி செல்ல அந்த மாணவி முயன்றார். அப்போது பைக்கில் இருந்த வாலிபர் மற்றொரு வாலிபரிடம் ஆசிட் பாட்டிலை கொடுத்துள்ளார்.
அவர் அந்த இளம்பெண்ணின் முகத்தின் மீது ஆசிட்டை வீசினார். உடனடியாக உஷாரான அந்த இளம்பெண், தனது கைகளால் மறைத்து கொண்டார். இதனால், அவருடைய முகத்தில் ஆசிட் படவில்லை. ஆனால், அவருடைய கைகள் வெந்து கருகின. இதனால் வலியில் அலறி துடித்தபடி அந்த மாணவி சரிந்து விட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர்கள் தப்பி விட்டனர்.
ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த அந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவியுடன் அதே கல்லூரியில் படித்து வரும் ஜிதேந்தர் என்பவர்தான் ஆள் வைத்து ஆசிட் வீசியுள்ளார் என தெரிய வந்துள்ளது. ஜிதேந்தர் அந்த மாணவியை கடந்த 7 மாதங்களாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் இந்த காதலை மாணவி ஏற்க மறுத்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜிதேந்தர், அவருடைய நண்பர்கள் அர்மான், இஷான் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜிதேந்தரும் மாணவி வசிக்கும் முகுந்த்பூரில் வசித்து வருகிறார். இதனால் டெல்லியில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது என இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் பற்றி மாணவி கூறும்போது, எனக்கு நீதி வேண்டும். அவர்கள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என கூறினார். இந்நிலையில், ஜிதேந்தரின் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.






