உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுடன் கலகலப்பாக உரையாடிய பிரதமர் மோடி

``எப்பவுமே முகப்பொலிவோட இருக்கீங்களே காரணம் என்ன? என கேட்ட இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினார்.
Published on

புதுடெல்லி,

சமீபத்தில் நவிமும்பையில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. புதிய வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, கோப்பையை பிரதமரிடம் கொடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், போட்டி தொடர்பான பரபரப்பான தருணங்களை ஆர்வமுடன் கேட்டறிந்தார். தன்னை சந்தித்த இந்திய அணி வீராங்கனைகளுக்கு தன் கைப்பட லட்டு வழங்கி பிரதமர் மோடி மகிழ்வித்தார்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி, இந்திய வீராங்கனைகளிடம், உலகக்கோப்பையை வென்ற ரகசியம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் கூறுகையில்,

'கடைசியாக 2017ல் உங்களை சந்தித்தோம் அப்போது கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் இந்த முறை நாங்கள் உலக சாம்பியன்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். உங்களை சந்தித்தது பெருமையளிக்கிறது.

எதிர்காலத்திலும் இதே மாதிரியான சூழலில் உங்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இலக்காக நிர்ணயிக்கிறோம்,' என்றார்.

வீராங்கனைகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில்,

நீங்கள் ஒரு மிகப்பெரிய காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளீர்கள். இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமில்லை. அது மக்களின் வாழ்க்கையாக மாறியுள்ளது. கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது. கிரிக்கெட்டில் தோல்வியடைந்தால், நாடே சோகத்தில் மூழ்கி விடுகிறது எனக் கூறினார்.

மேலும், உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகி விருதை வென்ற தீப்தி சர்மாவிடம்,

நீங்கள் கடவுள் அனுமன் டாட்டூ போட்டுள்ளீர்களே, அது எவ்வாறு உங்களுக்கு உதவியது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தீப்தி,

என்னை விட கடவுள் அனுமன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளேன். அதுவே என்னுடைய விளையாட்டை மேம்படுத்த அதிகமாக உதவியது,' எனக் கூறினார்.

தொடர்ந்து, பிரதமர் மோடியை பார்த்து, உங்கள் முகம் பொலிவுடன் இருப்பதற்கு காரணம் என்ன? இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

உடனே பிரதமர் மோடி 25 ஆண்டுகாலமாக அரசை நிர்வகிப்பதும்; இந்த மக்களின் ஆசீர்வாதமுமே காரணம்.

நான் அதுபற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை.. (சிரிக்கிறார்) என்று பதில் அளித்தார்.

பிரதமர் கூறியதைக் கேட்டு இந்திய வீராங்கனைகளிடையே சிரிப்பலை எழுந்தது. அப்போது, ஆல் ரவுண்டர் ஸ்நேகா ரானா, 'நாட்டு மக்களின் அன்பினால் தான் பிரதமரின் முகம் பொலிவுடன் இருக்கிறது,' என்றார். இதனைக் கேட்ட பிரதமர் மோடி,'நிச்சயமாக, என்னுடைய வலிமைக்கான காரணமே நாட்டு மக்கள் தான். நான் அரசு நிர்வாகத்தில் பல ஆண்டுகளை கழித்து விட்டேன். தொடர்ந்து ஆசிர்வாதங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் விளைவு தான் இவை எல்லாம், எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com