விமர்சனங்களை வரவேற்கிறேன்; பிரதமர் மோடி

விமர்சனங்களை வரவேற்பதாகவும், அதுதான் ஜனநாயகத்தின் ஆன்மா என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லி,
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி (Computer Scientist) லெக்ஸ் பிரிட்மென். செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வாளரான இவர் பாட்காஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட உலக பிரபலங்களை லெக்ஸ் பிர்ட்மென் பேட்டி எடுத்துள்ளார்.
இந்நிலையில், லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவரிடம் லெக்ஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். 3 மணிநேரம் 17 நிமிடங்கள் இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது.
லெக்ஸ் பிரிட்மென் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,
எனது வலிமை என் பெயரில் இல்லை. ஆனால், 1.40 பில்லியன் இந்தியர்கள், நாட்டின் கலாசாரம், பண்பாடுதான் என் வலிமை.
உலகத்தலைவர்களுடன் நான் கை குலுக்கும்போது அது மோடி இல்லை. 1.40 பில்லியன் மக்கள் உலகத்தலைவர்களுடன் கை குலுக்குகின்றனர் என்று பொருள்.
அமைதியை நிலைநாட்டுவது குறித்து இந்தியா பேசும்போது உலகம் அதை கேட்கிறது. ஏனென்றால் இந்தியா மகாத்மா காந்தியின் மண்.
நான் பிரதமராக பதவியேற்றபோது அந்நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தேன். இருநாட்டு உறவிலும் புதிய பக்கத்தை திறக்க முயற்சித்தேன். ஆனால், அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் விரோதம், துரோகத்தில் முடிந்தது.
பாகிஸ்தானில் நல்ல எண்ணங்கள் மேலோங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்கள் அமைதியின் வழியை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறோம். பாகிஸ்தான் மக்களே அமைதியைத்தான் விரும்புகின்றனர்.
விமர்சனங்களை நான் வரவேற்கிறேன், அதுதான் ஜனநாயகத்தின் ஆன்மா என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனது குழந்தை பருவத்தை நான் மிகவும் ஏழ்மை நிலையில் கழித்தேன். பள்ளிப்பருவதில் எனது வெள்ளை நிற ஷு க்களை பாலிஷ் செய்வதற்கு வகுப்பறையில் பயன்படுத்தப்பட்ட சாக்பீஸ்களை சேகரித்தேன்.
உயர்ந்த சக்தி என்னை அனுப்பியுள்ளது. காரணங்களுக்காகத்தான் நான் இங்கு இருக்கிறேன். நான் தனியாக இல்லை. என்னை அனுப்பிய சக்தி என்னுடன்தான் உள்ளது.
எனது தந்தையின் டீக்கடையில் நான் அமர்ந்திருக்கும்போது கடைக்கு வருபவர்களை பார்த்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அங்கு கற்றுக்கொண்டவற்றை எனது பொதுவாழ்வில் அமல்படுத்துகிறேன்.
நாடுதான் எல்லாம், அதற்கு சேவை செய்பவர்கள் கடவுள் என்று ஆர்.எஸ்.எஸ். எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது. வாழ்க்கையின் நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ். மூலம் நான் கண்டுபிடித்தேன். மிகவும் புனிதமான அமைப்பில் இருந்து வாழ்வின் மதிப்பை பெற்றதை புன்னியமாக கருதுகிறேன்.
இந்திய நலனே எனக்கு முக்கியம். என்னைப்பொறுத்தவரை எனது நாடுதான் எனது உச்ச அதிகாரம். இந்தியாவும், சீனாவும் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியில் போட்டியை கொண்டு செல்ல வேண்டும் என நாங்க்ள் விரும்புகிறோம். போட்டி மோசமானதல்ல, ஆனால் போட்டி ஒருபோதும் மோதலாக கூடாது' இவ்வாறு அவர் கூறினார்.