தமிழகத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஒரே நேரத்தில் பிரசாரம் செய்ய திட்டம்

ஜனவரி 16-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 3-ந்தேதி வரை தமிழகத்தில் முகாமிட ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
கூட்டணி அமைப்பது, பிரசாரம் செய்வது, பேரணிகளை நடத்துவது, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு உள்ளன.
ஆளும் தி.மு.க. ஓரணியாகவும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டாக மற்றொரு அணியாகவும் உள்ளன. விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் போட்டியில் உள்ளன. இதனால், தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இதன்படி, வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருவரும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து, ஜனவரி 16-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 3-ந்தேதி வரை தமிழகத்தில் முகாமிட ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளார் என கூறப்படுகிறது.






