நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பிரதமர் மோடி பேச்சு


நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பிரதமர் மோடி பேச்சு
x

நேபாளத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் கடந்த 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். அது வன்முறையில் முடிந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 900-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றம், தலைமைச் செயலகம், உச்ச நீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் இல்லங்களை சூறையாடினர்.

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார். அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதன் பின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்ததால், அடுத்து தேர்தல் நடக்கும்வரை அரசை வழிநடத்த இடைக்கால பிரதமரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கியை போராட்டக்குழு தேர்வு செய்தது. அவர் “ஆறு மாதங்கள் மட்டுமே பணியில் நீடிப்பேன்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், நேபாள இடைக்கால பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது நேபாள அரசை எதிர்த்து போராடி உயிரிழந்த இளைஞர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், நேபாளத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். நேபாள தேசிய தினத்தை ஒட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story