பிரதமர் மோடியின் தாயார் மீண்டும் அவமதிப்பு; பீகார் துணை முதல்-மந்திரி குற்றச்சாட்டு


பிரதமர் மோடியின் தாயார் மீண்டும் அவமதிப்பு; பீகார் துணை முதல்-மந்திரி குற்றச்சாட்டு
x

தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடியின் மறைந்த தாயாரை மீண்டும் அவமதித்துள்ளார் என்று சாம்ராட் சவுத்ரி கூறியுள்ளார்.

பாட்னா,

பீகாரில் கடந்த மாதம் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நடத்திய வாக்காளர் அதிகார யாத்திரையின்போது, பிரதமர் மோடியின் மறைந்த தாயாருக்கு எதிராக ஒரு தொண்டர் கோஷமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மீண்டும் பிரதமரின் தாயாருக்கு எதிராக கோஷமிடப்பட்டதாக பீகார் துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி குற்றம்சாட்டி உள்ளார். இந்த தடவை, மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் நடத்தி வரும் ‘பீகார் அதிகார யாத்திரை’யில் ராஷ்டிரீய ஜனதாதள தொண்டர்கள் கோஷமிட்டதாக அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘‘தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடியின் மறைந்த தாயாரை மீண்டும் அவமதித்துள்ளார். அவமதித்த தொண்டர்களை அவர் ஊக்குவித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

ஆனால், குற்றச்சாட்டை மறுத்துள்ள ராஷ்டிரீய ஜனதாதள செய்தித்தொடர்பாளர் சித்தரஞ்சன் காகன், அந்த வீடியோ வெட்டி ஒட்டப்பட்டுள்ளது என்று மறுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராயும், தேஜஸ்வி யாதவ் மீது கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார். தேஜஸ்வியை புராணக் கதாபாத்திரங்களான "கன்ஸ்" மற்றும் "காலியா நாக்" உடன் ஒப்பிட்டு, வாக்காளர்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் எச்சரித்தார்.

1 More update

Next Story