எஸ்.ஐ.ஆர். பணிச் சுமையால் வாக்குச்சாவடி நிலை அலுவலர் எடுத்த விபரீத முடிவு


எஸ்.ஐ.ஆர். பணிச் சுமையால் வாக்குச்சாவடி நிலை அலுவலர் எடுத்த விபரீத முடிவு
x

இரவு, பகலாக வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கும் பணியில் அனீஸ் ஜார்ஜ் ஈடுபட்டு இருந்தார்.

கண்ணூர்,

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையன்னூர் அருகே ஏவுனுக்கு கண்டி பகுதியில் வசித்தவர் அனீஸ் ஜார்ஜ் (வயது 41). இவர் பையன்னூர் அரசு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்காக (எஸ்.ஐ.ஆர்.) கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

நேற்று முன்தினத்துக்குள் சம்பந்தப்பட்ட அனைத்து வாக்காளர்களிடமும் கணக்கீட்டு படிவங்களை வழங்க வேண்டும் என்று அனீஸ் ஜார்ஜூக்கு அழுத்தம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் இரவு, பகலாக வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் பூத் முகவர்களுடன் இணைந்து வாக்காளர்கள் வசிக்கும் வீடுகளை கண்டறிந்து கணக்கீட்டு படிவங்களை வழங்கி வந்தார்.

இருப்பினும், அவரால் 200 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் வழங்க முடியவில்லை என தெரிகிறது. தனக்கு கொடுத்த காலஅவகாசத்துக்குள் வேலையை முடிக்க முடியாததால் மனமுடைந்தார். இதற்கிடையே வீட்டில் அனீஸ் ஜார்ஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த பையன்னூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வாக்குச்சாவடி நிலை அலுவரின் தந்தை ஜார்ஜ் கூறும்போது, எனது மகன் நள்ளிரவு 2 மணி வரை வாக்காளர்களிடம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். பணி அழுத்தம், பணிச்சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கண்ணூர் மாவட்ட கலெக்டருக்கு கேரள மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

1 More update

Next Story