மத்திய மந்திரி எல்.முருகன் வீட்டில் இன்று பொங்கல் விழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

டெல்லியில் மத்திய மந்திரி எல்.முருகன் வீட்டில் இன்று பொங்கல் விழா நடைபெறுகிறது.
புதுடெல்லி,
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் விழா இன்று காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொள்கிறார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்படுகிறது. விழாவையொட்டி தமிழ்நாட்டின் கிராமிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இசைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடன அமைப்பாளர் கலா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் மோடி இந்த கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்து, விழாவில் உரையாற்றுகிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அதன்பேரில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ‘தினத்தந்தி’ குழும இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், பாஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், பா.ஜனதா பிரமுகர்கள் சரத்குமார், குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.






