ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்


ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
x

ஜி ராம் ஜி திட்டம் 125 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுடன் நடைமுறைக்கு வர உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் கிராமப் பகுதிகளில் வறுமையை ஒழிக்கவும், வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ல் அமல் படுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் சோதனை ரீதியாக குறைவான மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், 2008ல் நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகே இத்திட்டத்தின் பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என பெயர் மாற்றப்பட்டது.

இத்திட்டத்தின்படி, 100 நாட்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டு, ஊதியம் உள்ளிட்ட முழு செலவினங்களையும் மத்திய அரசு ஏற்றது. இந்நிலையில், இத்திட்டத்தின்படி, 125 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், திட்டத்துக்கான செலவினங்களில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் ஏற்கும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டது.

மிக முக்கியமாக, திட்டத்தின் பெயரில் ராம் என்று வரும் வகையில், 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என பெயர் மாற்றப்பட்டது. அதாவது, 'விக்ஷித் பாரத் - கியாரண்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்' என்ற சட்டத்தின் பெயரை சுருக்கி, 'விபி ஜி ராம் ஜி' என்று அழைக்கப் படுகிறது.

இந்தநிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மாற்றாக ஜி ராம் ஜி மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டநிலையில் அந்த மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி முர்முவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பில் 100 நாள் வேலைத்திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜி ராம் ஜி மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருந்தது பாஜக அரசு. ஜி ராம் ஜி திட்டம் 125 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுடன் நடைமுறைக்கு வர உள்ளது.

1 More update

Next Story