6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி முர்மு ஆவார்.
டெல்லி,
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவிற்கு திரவுபதி முர்மு செல்கிறார். இந்த இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி முர்மு ஆவார்.
தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட திரவுபதி முர்மு இன்று அங்கோலா நாட்டின் தலைநகர் லுடண்டா செல்கிறார். அங்கு அங்கோலா நாட்டின் ஜனாதிபதியை முர்மு சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். மேலும், அங்கோலா நாட்டின் 50ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் முர்மு பங்கேற்கிறார். அங்கோலா நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார்.
அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 11ம் தேதி போட்ஸ்வானா செல்கிறார். அந்நாட்டின் தலைநகர் கபொரின் செல்லும் முர்மு போட்ஸ்வானா ஜனாதிபதி டுமா டிகொன் பொகோவை சந்திக்கிறார். அதன்பின், போட்ஸ்வானா நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார். அங்கோலா , போட்ஸ்வானா பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி முர்மு வரும் 13ம் தேதி நாடு திரும்புகிறார்.






