இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Nov 2025 8:07 PM IST
எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி: தென் மாவட்ட ரெயில் சேவையில் மாற்றம்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் ரெயில் சேவையில் மீண்டும் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
* உழவன் எக்ஸ்பிரஸ் நவ. 10 முதல் 29 வரை தஞ்சாவூர் - தாம்பரம் இடையே இயக்கப்படும்
* கொல்லம் - சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரெயில் நவ.10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கம்
* ராமேஸ்வரம் - சென்னை சேதுஅதிவிரைவு ரெயில் நவ.10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கம்
* ராமேஸ்வரத்தில் இரவு 8.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.35 மணிக்கு வரும்
* ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயில் நவ. 10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கம்
* ராமேஸ்வரத்தில் மாலை 17.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.45 மணிக்கு வரும்
* மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
* சென்னை எழும்பூர் - மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்
* பராமரிப்பு காரணமாக சென்னை எழும்பூருக்கு ரெயில் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 8 Nov 2025 7:56 PM IST
எகிப்து நாட்டில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான இளவேனில் வாலறிவன் (வயது 26) இன்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டார். போட்டியின் இறுதி வரை முன்னணி வகித்த அவர், தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19-வது சுடுதலுக்கு பின்னர் சரிவை சந்தித்து, 3-வது இடத்திற்கு சென்றார். இதனால், இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
எனினும் அவர், 232 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றார். தென் கொரியாவின் பான் ஹியோஜின் (255 புள்ளிகள்) முதல் இடமும், சீனாவின் வாங் ஜைபெய் (254 புள்ளிகள்) 2-வது இடமும் பிடித்தனர்.
- 8 Nov 2025 7:55 PM IST
7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 8 Nov 2025 6:38 PM IST
விஜய்யின் “ஜன நாயகன்” படத்தின் “தளபதி கச்சேரி” பாடல் வெளியானது
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் விஜய்யை வைத்து ’ஜனநாயகன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்ததுள்ளதால் உறுதியாக பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 9 ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர்.
- 8 Nov 2025 5:36 PM IST
குற்றவாளிகளை பிடிக்க திணறுவது, பிடித்தாலும் அவர்களை சிறையில் வைத்திருக்க வக்கில்லாமல் வெளியே அனுப்பி, இன்னும் பல குற்றங்களை அவர்கள் செய்வதை கைகட்டி வேடிக்கை பார்ப்பது- இப்படி நடத்தப்படும் ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?
குற்றவாளிகளை குஷியாக்கி, மக்களை பயத்தில் ஆழ்த்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மயிலாடுதுறை பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீதும், திருவாய்மூர் வி.ஏ.ஓ-வாக இருந்த ராஜாராமன் மரணத்தை விசாரித்து, அதில் தொடர்புள்ளோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- 8 Nov 2025 5:11 PM IST
தென்காசி: சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை
தென்காசி மாவட்டத்தின் சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
- 8 Nov 2025 5:02 PM IST
பீகார் சட்டசபை தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்கு பதிவில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கின்றது.
- 8 Nov 2025 4:59 PM IST
ஆஸி.க்கு எதிரான கடைசி டி20 போட்டி மழையால் ரத்து - தொடரை கைப்பற்றிய இந்தியா.!
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் அடித்திருந்தபோது மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அபிஷேக் சர்மா 23 ரன்களுடனும், கில் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மழை நின்று, போட்டி மீண்டும் தொடங்கும் என ரசிகர்கள் மைதானத்தில் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக போட்டி ரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் போட்டியில் மழையால் பாதியில் ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2, 3 மற்றும் 4-வது போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. கடைசி போட்டியில் ரத்துசெய்யப்பட்டதால், இந்திய அணி தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டியை வென்று தொடரை சமன் செய்துவிடலாம் என்று ஆஸ்திரேலிய அணியினர் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், அவர்களது ஆசை மழையால் நிராசையானது.
- 8 Nov 2025 4:06 PM IST
திருப்பத்தூரில் கொடூரம்: ஷிப்ட் மாற்றுவதில் செக்யூரிட்டிகள் இடையே தகராறு; ஒருவர் கொலை
திருப்பத்தூரில் சூப்பர் மார்க்கெட்டில் ஷிப்ட் மாற்றுவதில் செக்யூரிட்டிகள் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், ஒரு செக்யூரிட்டியை மற்றொரு செக்யூரிட்டி கல்லால் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- 8 Nov 2025 3:53 PM IST
கரூர் சம்பவம்; சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை ஒப்படைத்த த.வெ.க.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆதாரங்களை த.வெ.க. நிர்வாகிகள் இன்று சி.பி.ஐ. அதிகாரிகளை நேரில் சந்தித்து ஒப்படைத்தனர்.



















