பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்


பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்
x
தினத்தந்தி 20 Sept 2024 7:57 AM IST (Updated: 20 Sept 2024 8:11 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

புதுடெல்லி,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

அமெரிக்கா நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை அமெரிக்கா செல்கிறார்.

குவாட் உச்சி மாநாட்டில் ரஷியா-உக்ரைன் மோதல், மேற்கு ஆசியா பதற்றம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய நிலவரம் உள்ளிட்ட சர்வதேச சவால்கள் குறித்து தலைவர்கள் விரிவாக விவாதிக்க உள்ளனர். மாநாட்டுக்கு இடையே தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட சந்திப்புகளும் நடைபெறுகின்றன.

அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர். குவாட் மாநாட்டை தொடர்ந்து நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நடைபெறும் எதிர்காலத்துக்கான உச்சிமாநாட்டில் 23-ந்தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.


Next Story