நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்தது நிரூபணம்-ராகுல்காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்திருப்பது நிரூபணமாகி உள்ளது என்று ராகுல்காந்தி மீண்டும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ரேபரேலி,
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.பீகாரில், ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார். இந்நிலையில், ராகுல்காந்தி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ரேபரேலிக்கு 2 நாட்கள் பயணமாக நேற்று சென்றார். லக்னோ விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் உள்ளிட்டேர் வரவேற்றனர்.
பின்னர், ரேபரேலியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற ராகுல்காந்தி, அங்கு நிருபர்களுக்கு அளித்த ேபட்டியில் கூறியதாவது:-எங்களது முக்கிய கோஷம் ‘வாக்கு திருடரே, உங்கள் பதவியை விட்டு வெளியேறுங்கள்’’ என்பதுதான். நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்திருப்பது நிரூபணமாகி வருகிறது. அதை ஜனநாயக வழிமுறையில் மீண்டும் மீண்டும் நிரூபிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.






