ராஜஸ்தான்: வயலில் பதுக்கி வைத்திருந்த 10 ஆயிரம் கிலோ வெடிமருந்து பறிமுதல்

187 சாக்கு மூட்டைகளில் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து வைக்கப்பட்டிருந்தது.
ஜெய்ப்பூர்,
நாட்டின் குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் நாகவூர் மாவட்டம் ஹர்சவூர் கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் வெடிமருந்து பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்து வயல் பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு பதுக்கி வைத்திருந்த 10 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பறிமுதல் செய்தனர். 187 சாக்கு மூட்டைகளில் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து வைக்கப்பட்டிருந்தது.
வெடிமருந்தை பறிமுதல் செய்த போலீசார், வயலில் வெடிமருந்தை பதுக்கி வைத்திருந்த சுலைமான் கான் என்ற நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுலைமானிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், 10 ஆயிரம் கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றன.






