‘நன்னடத்தை அடிப்படையில்’ விடுதலையான பலாத்கார குற்றவாளி 5 ஸ்டார் ஓட்டலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்

பார்க் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் இரவு விடுதி ஒன்றின் முன், 40 வயது பெண் ஒருவரை கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை ஓடும் காரில் பலாத்காரம் செய்தது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பிதன்நகர் பகுதியில் உள்ள ஹையத் ரீஜென்சி என்ற 5 ஸ்டார் ஓட்டலில் பெண் ஒருவர் அவருடைய கணவர், நண்பர்களுடன் சென்றிருக்கிறார். சம்பவத்தன்று அதிகாலை 4.15 மணியளவில் அவர்கள் கிளப்பில் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.
அப்போது, நசீர் கான் என்பவர் உறவினரான ஜுனைத் கான் என்பவருடன் வந்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி போலீசில் அந்த பெண் அளித்த புகாரில், 2 பேரும் பெண்ணின் நண்பர்களை தாக்க முயன்றதுடன், பெண்ணிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அப்போது, தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரை நோக்கி அவர்கள் கண்ணாடி பாட்டில்களை வீசியுள்ளனர். இதனால் அவர்கள் ஓட்டலில் இருந்து வெளியேறி தப்பியோட முயற்சித்தனர். எனினும், ஜுனைத் 20 பேரை அழைத்து தாக்க தொடங்கினர் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் கும்பலாக சேர்ந்து பெண்ணை தள்ளி விட்டும், அவருடைய அந்தரங்க பகுதிகளை தொட்டும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கான மருத்துவ அறிக்கையை அவர் புகாரில் இணைத்துள்ளார். இதன்பின்பு, தொலைபேசி வழியே அழைத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர் என புகார் தெரிவிக்கின்றது.
2012-ம் ஆண்டு பிப்ரவரியில், நகரின் மைய பகுதியான பார்க் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் இரவு விடுதி ஒன்றின் முன், 40 வயது பெண் ஒருவரை கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை ஓடும் காரில் பலாத்காரம் செய்தது. அவர்களில் நசீரும் ஒருவர். அப்போது அவருக்கு வயது 31. 2 டீன்-ஏஜ் மகள்களின் தாயான அந்த பெண்ணை, கிளப்பில் இருந்து 2 கி.மீ. பயண தொலைவுக்கு பின்னர் சாலையில் வீசி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. சிகிச்சைக்கு பின்னர் அவர் உயிர் பிழைத்து கொண்டார்.
இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு நசீர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், ‘நன்னடத்தை அடிப்படையில்’ தண்டனை காலத்திற்கு முன்பே 2020-ம் ஆண்டு நசீர் விடுவிக்கப்பட்டார்.






