சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுப்பு; பணிநிறுத்தம் தொடரும் - கொல்கத்தா டாக்டர்கள் முடிவு


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுப்பு; பணிநிறுத்தம் தொடரும் - கொல்கத்தா டாக்டர்கள் முடிவு
x
தினத்தந்தி 10 Sept 2024 7:41 PM IST (Updated: 10 Sept 2024 9:09 PM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை விவகாரத்தில் எங்களுடைய கோரிக்கைகள் பூர்த்தியாகவில்லை. அதனால், பணி நிறுத்தம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. அவர்கள் பணிக்கு திரும்பி விட்டால், அவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் தெரிவித்து இருந்தது.

இதேபோன்று, இடமாற்றம் உள்ளிட்ட எந்தவித நடவடிக்கையும் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படாது என்று மேற்கு வங்காள அரசும் உறுதி அளித்து இருந்தது. இதனை தொடர்ந்தே கோர்ட்டின் உத்தரவும் வெளிவந்தது. எனினும், அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாத சூழலில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவது என டாக்டர்கள் முடிவு செய்தனர்.

எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணி நிறுத்தம் தொடரும் என தெரிவித்த அவர்கள், பெண் டாக்டருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கொல்கத்தா காவல் ஆணையாளர், சுகாதார செயலாளர், சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குநர் ஆகியோரை இன்று மாலை 5 மணிக்குள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அரசிடம் கேட்டு கொண்டோம்.

ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் பூர்த்தியாகவில்லை. அதனால், எங்களுடைய பணி நிறுத்தம் தொடரும். பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.


Next Story