ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் 'சமுத்ரயான்' திட்டம் 2026-ல் தொடங்கும் என அறிவிப்பு


ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் 2026-ல் தொடங்கும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 14 May 2025 12:44 PM IST (Updated: 14 May 2025 2:38 PM IST)
t-max-icont-min-icon

'சமுத்ரயான்' திட்டம் மூலம் 3 விஞ்ஞானிகள் 'மத்ஸ்யா' நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தில் செல்ல உள்ளனர்.

திருவனந்தபுரம்,

ஆழ்கடலில் இதுவரை கண்டறியப்படாத கனிமங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்கு மனிதர்களை கடலில் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அனுப்பும் சமுத்ராயன் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக 3 பேர் அமர்ந்து செல்லும் வகையில் 'மத்ஸ்யா' என்ற ஆழ்கடல் நீர்மூழ்கி ஆய்வு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன், 'சமுத்ரயான்' திட்டம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"ஆழ்கடலில் 6 ஆயிரம் மீட்டர் வரை சென்று ஆய்வு செய்வதற்கான 'சமுத்ரயான்' திட்டம் மூலம் 3 விஞ்ஞானிகள் 'மத்ஸ்யா' நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தில் செல்ல உள்ளனர். இந்த திட்டம் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.

இந்த பணி இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும், ஆழ்கடலில் உள்ள வளங்களை மதிப்பிடுவதற்கும், விரிவான கடல் கண்காணிப்பு மற்றும் ஆழ்கடல் சுற்றுலாவின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆழ்கடல் மண்டலத்தில் இருந்து மாதிரிகளை சேகரிப்பதில் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் ஆழ்கடலில் உள்ள உயிரினங்களின் தனித்துவமான பண்புகளையும், அங்குள்ள நீரையும் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகளை வழங்கும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story