ஐ.சி.யு.வில் இருந்த விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்; போலீசார் விசாரணை

விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
குர்காவன்,
மேற்கு வங்காளத்தில் வசிப்பவரான விமான பணிப்பெண் ஒருவர் பெரியதொரு விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் ஓட்டலில் தங்கியிருந்தபோது, பயிற்சி பெறுவதற்காக, நீச்சல் குளத்திற்கு சென்று நீச்சல் அடித்திருக்கிறார். அப்போது அவர், நீரில் மூழ்கி இருக்கிறார்.
இதுபற்றி அறிந்ததும், அவருடைய கணவர் அந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். 5-ந்தேதி நடந்த இந்த சம்பவத்தில், அவருக்கு தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு அவசரகால சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், அரியானாவின் குர்காவன் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு, பிராணவாயு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் அந்த பெண்ணை ஐ.சி.யு.வில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார்.
கடந்த ஞாயிற்று கிழமை சிகிச்சை முடிந்து அந்த பெண் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது, கணவரிடம் நடந்த விசயங்களை பற்றி கூறியிருக்கிறார். அவர் அரை மயக்கத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன்பின்னர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் யாரென்று தெரிய வரவில்லை. இதுபற்றி சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 4 ஆண்டுகளில் 3-வது முறையாக நடந்த சம்பவம் இது என கூறப்படுகிறது.
2023-ம் ஆண்டில் கஜகஸ்தான் பெண் ஒருவர் இதுபோன்று பாதிக்கப்பட்டு உள்ளார். 2020-ம் ஆண்டும் இதேபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. விமான பணிப்பெண்ணுக்கு பாதிப்பு ஏற்படும்போது, 2 செவிலியர்கள் உடன் இருந்துள்ளனர் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






