பிரதமர் மோடியுடன் சித்தராமையா இன்று சந்திப்பு; மேகதாது அணை பற்றி ஆலோசிக்க திட்டம்

கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.3,500 என விலையை உயர்த்தி தர வேண்டும் என கரும்பு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா டெல்லியில் பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து பேச இருக்கிறார். இதற்காக அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியை இன்று மாலை 5 மணியளவில் அவர் சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, கரும்பு விவசாயிகளின் விவகாரம் மற்றும் மகதாயி மற்றும் மேகதாது நீர்த்தேக்க திட்டங்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள ஒப்புதல்களை வழங்கும்படி கோருவார் என்றும் அது தொடர்பான ஆலோசனை நடைபெற கூடும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதன்பின்ன்ர இரவு 7 மணியளவில் அவர் பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்வார்.

கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.3,500 என விலையை உயர்த்தி தர வேண்டும் என கரும்பு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு சித்தராமையா சமீபத்தில் கடிதம் ஒன்றையும் எழுதினார்.

கர்நாடகாவில் அதிகரித்து வரும் விலைவாசியை முன்னிட்டு, கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த கோரி கரும்பு விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக முதலில் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய தலைவர்களுடன் முதல்-மந்திரி சித்தராமையா அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தினார். இதுபற்றி பிரதமர் மோடிக்கும் கடிதம் ஒன்றை எழுதினார்.

இந்நிலையில், இந்த விசயத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் பெலகாவியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கற்களை வீசி எறிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்பின்னர், கர்நாடக சர்க்கரை துறை மந்திரி சிவானந்த் பாட்டீல் பாதுகாப்பு வாகனம் மீது பெலகாவியில் காலணி ஒன்றும் வீசப்பட்டது.

இந்த நிலையில், பாகல்கோட் பகுதியில் கோதாவரி சர்க்கரை ஆலை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கரும்பு விவசாயிகள் தீ வைத்து கொளுத்தினர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடியுடன் சித்தராமையாவின் இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com