‘ஸ்மார்ட் வகுப்புகளை விட ஸ்மார்ட் ஆசிரியர்களே முக்கியம்’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஸ்மார்ட் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் தேவைகளை புரிந்துகொள்வார்கள் என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.
புதுடெல்லி,
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 60 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு, விருதுகளை வழங்கி ஆசிரியர்களை கவுரவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பேசியதாவது;-
“ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் பிற நவீன வசதிகள் முக்கியமானவையாக இருந்தாலும், அவற்றை விட ஸ்மார்ட் ஆசிரியர்களே மிகவும் முக்கியமானவர்கள். ஸ்மார்ட் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் தேவைகளை புரிந்துகொள்வார்கள். ஸ்மார்ட் ஆசிரியர்கள் அன்பு மற்றும் உணர்திறன் மூலம் படிப்பை சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் ஆக்குகிறார்கள்.
இத்தகைய ஆசிரியர்கள் மாணவர்களை சமூகம் மற்றும் தேசத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டவர்களாக ஆக்குகிறார்கள். விவேகமுள்ள ஆசிரியர்கள் குழந்தைகளில் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு உணர்வை வளர்க்க உழைக்கிறார்கள். நான் ஆசிரியையாக பணியாற்றிய நாட்கள், எனது வாழ்நாளில் மிக அர்த்தமுள்ள காலகட்டம் ஆகும்.
மாணவர்களின் குணத்தை வளர்ப்பது ஒரு ஆசிரியரின் முதன்மையான கடமை. போட்டி, புத்தக அறிவு மற்றும் சுயநலத்தில் மட்டுமே ஆர்வமுள்ள மாணவர்களை விட பொறுப்பு, உணர்திறன் மற்றும் அர்ப்பணிப்புடன் ஒழுக்கத்தை பின்பற்றும் மாணவர்களே சிறந்தவர்கள். ஒரு நல்ல ஆசிரியருக்கு உணர்ச்சியும், அறிவும் அவசியமானது. உணர்ச்சி மற்றும் அறிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மாணவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஏழ்மையான பின்னணியை கொண்ட குழந்தைகள் கல்வியின் சக்தியால் முன்னேற்றம் அடைய முடியும். அன்பும், அர்ப்பணிப்பும் கொண்ட ஆசிரியர்கள் குழந்தைகளின் போராட்டிற்கு வலிமை அளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய வெகுமதி என்னவென்றால், அவர்களின் மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களை நினைவில் வைத்துக் கொண்டு குடும்பம், சமூகம் மற்றும் நாட்டிற்கு பாராட்டத்தக்க பங்களிப்பைச் செய்வதுதான்.
இந்தியாவை உலகளாவிய அறிவுசார் வல்லரசாக மாற்றுவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். நமது ஆசிரியர்கள் உலகின் சிறந்த ஆசிரியர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும். நமது நிறுவனங்களும் ஆசிரியர்களும் கல்வியின் மூன்று துறைகளான பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் தீவிரமாக பங்களிக்க வேண்டும். நமது ஆசிரியர்கள் தங்கள் முக்கிய பங்களிப்பின் மூலம் இந்தியாவை உலகளாவிய அறிவுசார் வல்லரசாக நிலைநிறுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.”
இவ்வாறு திரவுபதி முர்மு தெரிவித்தார்.






