ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரித்த சபாநாயகர்
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை சபாநாயகர் அங்கீகரித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து இன்றைய தினம் ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் ஓம் பிர்லா அங்கீகரித்தார். இதன்படி ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களின் சம்பளம் மற்றும் படிகள் சட்டம், 1977, 2-வது பிரிவின் கீழ் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக தன்னை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ததற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாடாளுமன்றத்தில் நாம் ஒவ்வொரு இந்தியரின் குரலாக இருப்போம். நமது அரசியலமைப்பை பாதுகாப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் செயல்களுக்கு அவர்களை பதில் சொல்ல வைப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.