தெலுங்கானா: விடுதியில் ஏ.சி. வெடிப்பு; சுயநினைவை இழந்து கிடந்த 6 மாணவிகள்

ஏ.சி. இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் மேச்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் அல்வால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விடுதி ஒன்றில் இன்று காலை 6 மாணவிகள் சுயநினைவை இழந்து கிடந்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் உடனடியாக உதவிக்கு ஓடி சென்றனர். விடுதியில் உள்ள ஏ.சி. வெடித்து, அதில் தீ பரவியுள்ளது. இதனால், ஏற்பட்ட புகையால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விடுதிக்கு வந்து, சுயநினைவை இழந்து கிடந்த மாணவிகளை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அந்த மாணவிகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏ.சி. இயந்திரத்திற்கு வர கூடிய மின்சார இணைப்பில் கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது என தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.






