நீலவான் பாதுகாவலருக்கு 93 வயது

இந்திய விமானப்படையின் 93-வது ஆண்டு விழா ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் நடந்தது.
இந்தியாவின் பாதுகாப்புக்காக தரைப்படை, விமானப்படை, கடற்படை என்ற முப்படைகள் தீவிரமாக கடமையாற்றிக்கொண்டு இருக்கின்றன. இதில் விமானப்படை எதிரிகளின் வான்வழி தாக்குதல் முயற்சிகளையெல்லாம் முறியடித்து வருகிறது. இதுதவிர இயற்கை பேரிடர்களின்போது மீட்பு பணிகளில் விமானப்படையின் பங்கு அளப்பரியதாகும். இந்திய விமானப்படை உலகிலேயே 4-வது பெரிய விமானப்படையாகும். வீரம் மற்றும் புகழ்மிக்க இந்திய விமானப்படையின் 93-வது ஆண்டு விழா அலங்கார அணிவகுப்போடு உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் நடந்தது.
தேசிய கொடி, இந்திய விமானப்படையின் கொடி மற்றும் சிந்தூர் கொடியை ஏந்திக்கொண்டு ஹெலிகாப்டர்கள் வானில் பறந்தது கண்களை கவரும் வகையில் இருந்தது. தொடர்ந்து விமானப்படை விமானங்கள் மெய் சிலிர்க்க வைக்கும் சாகசங்களை செய்து அசத்தின. இந்திய விமானப்படை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1932-ம் ஆண்டு ராயல் விமானப்படை என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 2-வது உலகப்போரின்போது ஜப்பானிய படைகளுக்கு எதிராக வானில் வலம் வந்த இந்த விமானப்படை இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்திய விமானப்படையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1947-48-ல் காஷ்மீர் மோதல், 1962-ல் சீனாவோடு நடந்த போரின்போது தளவாடங்களையும், வீரர்களையும் போர்முனைக்கு ஏற்றி செல்லும் வேலைகளை கவனித்தது.
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின்போதுதான் எதிரி நாட்டு விமானப்படையோடு மோதி தன் வீரத்தை பறைசாற்றியது. வங்காளதேசத்தை, பாகிஸ்தானில் இருந்து விடுவிக்க இந்திய விமானப்படையின் தீர செயல்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1999-ல் நடந்த கார்கில் போரில் மிராஜ் 2000 போர் விமானங்கள் உயர்ந்த மலை மீது இருந்த எதிரி படைகளின் தளங்களை தூள்தூளாக்கியது. இதுமட்டுமல்லாமல் இலங்கை, சூடான், காங்கோ போன்ற நாடுகளுக்கு சென்ற அமைதிப்படையிலும் இந்திய விமானப்படை பங்கேற்றது. மேலும் சுனாமி, கனமழை, பெரு வெள்ளம் போன்ற பேரிடர் சமயங்களிலும் மீட்பு பணிகள், உணவு பொட்டலங்கள் போடுவது போன்ற பல பணிகள் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியது. இந்தியாவில் மட்டுமல்லாமல் 2004-ல் மாலத்தீவில் சுனாமி பாதிப்பு, 2015-ல் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம், ஏமனில் மீட்பு பணிகளில் இந்திய விமானப்படை ஆற்றிய பணி உலக அரங்கில் வெகுவாக பாராட்டப்பட்டது.
இத்தகைய இந்திய விமானப்படையில் இப்போது மிக்-21 விமானங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்ட பிறகு விமானங்கள் பற்றாக்குறை இருக்கிறது. 350 புதிய விமானங்களை விமானப்படையில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலேயே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் 83 தேஜஸ் விமானங்கள்தான் பெருமை அளிப்பதாகும். இதில் 2 விமானங்கள் விரைவில் விமானப்படையில் சேர்க்கப்பட இருக்கின்றன. சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடந்தது.
4 ஆண்டுகளில் 83 விமானங்களும் விமானப்படையில் இணைக்கப்பட இருக்கின்றன. இப்போது இருக்கும் விமானங்கள் தேவை பற்றி இந்திய விமானப்படை தளபதியான ஏர் சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங், “பசியோடு உள்ள வாய்கள் தயாராக இருக்கின்றன. உணவுக்காக காத்து இருக்கிறோம். ஆண்டுக்கு 30 முதல் 40 விமானங்கள் தேவையாக இருக்கிறது” என்று தெரிவித்துவிட்டார். ஆக பசியுள்ள விமானப்படையின் பசியை போக்க விமானங்களை கொடுக்கும் பணியில் மத்திய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். எதிர்காலத்தில் போர் என்பது மண்ணில் அல்ல, விண்ணில் தான் என்பதால் விமானப்படையை வலுப்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.






