நாடாளுமன்ற தேர்தல் முடிவால் ஒரு ரூபாய் பந்தயத்தில் ரூ.75 ஆயிரத்தை இழந்த வாலிபர்
நடந்து முடிந்த தேர்தலில் பாலக்காடு தொகுதியில் ஸ்ரீகண்டன் மீண்டும் வெற்றி பெற்றார்.
திருவனந்தபுரம்,
நாடாளுமன்ற தேர்தலில், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 20 தொகுதிகளில் 18 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. பா.ஜனதா கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சாதனை படைத்தது.
பாலக்காடு தொகுதியில் எம்.பி.யாக இருந்த ஸ்ரீகண்டன் காங்கிரஸ் சார்பில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக இடதுசாரி கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான விஜயராகவன் போட்டியிட்டார்.
இந்நிலையில் பாலக்காடு பகுதியை சேர்ந்த ரபீக் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தீவிர தொண்டர் ஆவார். ரபீக் தினமும் பொருட்கள் வாங்கச் செல்லும் கடையில் அந்த பகுதியை சேர்ந்த ஆர்யா என்ற இளம்பெண் வேலை செய்து வருகிறார். ஆர்யாவின் கணவர் சுஜீஷ் காங்கிரஸ் கட்சியில் அந்த பகுதி தலைவராக உள்ளார்.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஒரு நாள் கடைக்கு சென்ற ரபீக், ஆர்யாவிடம் தேர்தலில் ஸ்ரீகண்டன் மீண்டும் வெற்றி பெற்றால், அவர் கூடுதலாக பெறும் (பெரும்பான்மை) ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு ரூபாய் தருவதாக பந்தயம் கட்டினார். இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் பாலக்காடு தொகுதியில் ஸ்ரீகண்டன் மீண்டும் வெற்றி பெற்றார்.
அவர் 75,283 ஓட்டுகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து நின்றவரை தோற்கடித்தார். இதனால் பந்தயத்தில் தோல்வியடைந்த ரபீக், தான் கூறியபடி ஒரு ஓட்டுக்கு ரூ.1 என்ற வீதத்தில் ரூ.75ஆயிரத்து 283-யை ஆர்யாவிடம் வழங்கினார்.