திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் - பக்தர்கள் அவதி

கோவில் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் - பக்தர்கள் அவதி
Published on

புதுச்சேரி,

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். சனிக்கிழமைகளில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

பக்தர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மற்றும் இதர விவரங்கள் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கோவில் வழிகாட்டிகள் என்ற பெயரில் பக்தர்களை சிலர் கோவில் உள்ளே அழைத்துச் சென்று பூஜை, பரிகாரம் உள்ளிட்டவற்றை செய்து தருவதாக கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல்துறையினர் இன்று கோவில் வளாகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வழிகாட்டிகள் என்று கூறிக்கொண்டு பக்தர்களிடம் பணம் பெற்ற கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட 15 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில், கோவில் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கட்டண தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்திற்கான வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் எள் தீபம் வழங்குவதற்கு ஆட்கள் இல்லாததால், பக்தர்கள் தீபம் ஏற்றமுடியாமல் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கோவில் ஊழியர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com