இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 06-02-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 06-02-2025
x
தினத்தந்தி 6 Feb 2025 9:15 AM IST (Updated: 6 Feb 2025 10:09 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 6 Feb 2025 7:58 PM IST

    ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகள் - சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி பா.ஜ.க. மனு

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    ஞானசேகரனுக்கு எதிரான 20 வழக்குகளை சி.பி.ஐ.க்கோ அல்லது சிறப்பு புலனாய்வு குழுக்கோ மாற்ற வேண்டும் என பா.ஜ.க. வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

  • 6 Feb 2025 7:06 PM IST

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஹர்ஷித் ராணா திறமையாக பந்து வீசியுள்ளார்.

    அவர், அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற 249 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

  • 6 Feb 2025 6:59 PM IST

    இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ் இன்று கூறும்போது, நிலம் வழியாகவும், கடல் மற்றும் வான் வழியாகவும் பாலஸ்தீனியர்கள் வெளியேறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    காசாவில் இருந்து பெருமளவிலான மக்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிப்பதற்கான டிரம்ப்பின் தைரியம் வாய்ந்த திட்டத்திற்கு அவர் வரவேற்பும் தெரிவித்து உள்ளார்.

  • 6 Feb 2025 6:38 PM IST

    முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லைக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சாலையில் நடந்து சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கைகுலுக்கினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார்.

  • 6 Feb 2025 5:29 PM IST

    மத்திய பிரதேசத்தின் சிவ்புரி நகரருகே, 2 பேர் அமர கூடிய மிரேஜ் 2000 ரக போர் விமானம் திடீரென இன்று விபத்தில் சிக்கியது. எனினும், விமானிகள் இருவரும் வெளியே குதித்து உயிர் தப்பினர்.

    இயந்திர கோளாறால் விபத்து நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. எனினும், விபத்திற்கான காரணம் பற்றி உறுதி செய்வதற்கான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

  • 6 Feb 2025 4:37 PM IST

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து, நாடாளுமன்ற மாநிலங்களைவில் பிரதமர் மோடி இன்று பேசினார்.

    அவர் பேசும்போது, முதலில் குடும்பம் என்பதே காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை ஆகும். அதன் கொள்கைகளும் அதனை சுற்றியே இருக்கும் என்றார்.

    அனைவரின் ஆதரவுடன், அனைவருக்கும் வளர்ச்சி என்ற பொறுப்புணர்வானது எல்லோருக்கும் உள்ளது. ஆனால், காங்கிரசிடம் இருந்து இதனை எதிர்பார்ப்பது என்பது ஒரு பெரிய தவறு என்றார்.

  • 6 Feb 2025 4:28 PM IST

    மத்திய பிரதேசம் : இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 விமானம் விபத்தில் சிக்கி விழுந்து நொறுங்கியது. விமானி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 6 Feb 2025 4:08 PM IST

    2 கோடி வேலை வாய்ப்புகள் என்ற மத்திய அரசின் வாக்குறுதி என்னவானது? ஆம் ஆத்மி கேள்வி

    நாடு கடத்தப்பட்டவர்களுக்கு கை விலங்குகள் போடப்பட்டன என கூறப்படும் விவகாரம் பற்றி ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இன்று கூறும்போது, முதலில் சட்டவிரோத இந்திய குடியேறிகள் என அவர்களை கூறுவதே தவறு.

    வாழ்வைத்தேடி அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றனர். அவர்கள் பயங்கரவாதிகளோ அல்லது குற்றவாளிகளோ அல்ல.

    ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகள் தரப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க தவறி விட்டது என கூறியுள்ளார்.

  • 6 Feb 2025 3:59 PM IST

    மின்சாரம் தாக்கியதால் தூய்மைப்பணியாளர் உயிரிழப்பு

    சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கழிவுநீர் அடைப்பை சீரமைக்கும் பணியின்போது தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அனுபவம் இல்லாமல் பணியில் ஈடுபட்டதால் பட்டாபி என்ற தூய்மை பணியாளர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த பட்டாபியின் உடலை கைப்பற்றி கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் அனுப்பி வைத்தனர். 

  • 6 Feb 2025 3:57 PM IST

    12 மசோதாக்கள் மீது கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை? என கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு ஒத்தி வைத்தது.


Next Story