இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..13-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 May 2025 7:14 PM IST
ஜனாதிபதி திரவுபதி முர்முவோடு உள்துறை மந்திரிஅமித்ஷா, மற்றும் சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் சந்தித்தனர்.
- 13 May 2025 7:11 PM IST
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொழிற்சாலைகளில் வளர்ப்பது போல் வளர்த்தெடுத்து வருகிறது; பாகிஸ்தான் தனது பயங்கரவாத செயல்களை நிறுத்தும் வரையில் சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
- 13 May 2025 5:57 PM IST
ஓடும் பஸ்சிலிருந்து குழந்தை தவறி விழுந்து பலி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பஸ்சிலிருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. முன்பக்க கதவை அடைக்க கூறியும் நடத்துனர் செய்யாததால் குழந்தை உயிரிழந்ததாக தந்தை குற்றம்சாட்டி உள்ளார். முன்பக்க கதவு திறந்து வைத்திருந்ததாலேயே குழந்தை உயிரிழந்ததாக தந்தை புகார் அளித்துள்ளார். 9 மாத குழந்தையை தந்தை தூக்கி வைத்திருந்தநிலையில் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 13 May 2025 5:20 PM IST
பஹல்காம் தாக்குலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகள் இடையே 4 நாட்கள் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தானுடனான தற்போதுள்ள நிலைமை குறித்து நாடாளுமன்ற குழுவிடம் வருகிற 19-ந்தேதி வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்கிறார். சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற வெளியுறவு நிலை குழுவிடம் அவர் விளக்குவார்.
- 13 May 2025 5:09 PM IST
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, ஈரோடு, தென்காசி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 13 May 2025 3:58 PM IST
இரும்பு மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்காவின் வரிகளுக்கு பதிலடியாக, 29 அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா பதிலடி வரிகளை முன்மொழிந்துள்ளது.
- 13 May 2025 3:19 PM IST
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அதில், உங்களுடைய மனவுறுதி, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் வெளிப்பாடு இது என தெரிவித்த பிரதமர் மோடி, தேர்வு முடிவால் மனவருத்தம் அடைந்த மாணவர்களுக்கு வெளியிட்ட செய்தியில், ஒரு தேர்வு ஒருபோதும் உங்களை வரையறை செய்து விடாது. நம்பிக்கையுடன் இருங்கள். ஏனெனில் பெரிய விசயங்கள் காத்திருக்கின்றன என தெரிவித்து உள்ளார்.
- 13 May 2025 2:28 PM IST
பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்து உள்ளது என பொள்ளாச்சி வழக்கின் தண்டனை பற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் பெருங்கொடுமை நிகழ்த்தப்பட்டது என அவர் கூறியுள்ளார்.
- 13 May 2025 2:20 PM IST
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர். ஒருவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது.
- 13 May 2025 1:29 PM IST
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சிபிஎஸ் இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 23.71 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.