இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 April 2025 5:43 PM IST
நீண்ட நாள் தோழியை மணந்து கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகை
கிறிஸ்டென் ஸ்டீவர்ட்-டைலான் மேயர் ஜோடிக்கு தற்போது எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இல்லத்தில் நடந்த இந்த திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகை கிறிஸ்டெனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- 27 April 2025 4:38 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 27 April 2025 4:37 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- 27 April 2025 4:36 PM IST
காஷ்மீர் தாக்குதல்: சர்ச்சை வீடியோ பதிவிட்ட திருச்சி வாலிபர் கைது
இதுதொடர்பான அந்த வீடியோவில், 'ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் ஐ.டி. பிரிவின் பொறுப்பாளராக உள்ள தலித் ஹுசைன் ஷாவின் புகைப்படத்தை காட்டி, அவர் காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். மேலும் அவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிற்காக பணியாற்றுகிறார்' என்று மன்சூர் அலி கூறியிருந்தார்.
- 27 April 2025 4:35 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : அந்த 3 பேரும் அசத்தினால் வெற்றி இந்தியாவுக்குத்தான் - ரவி சாஸ்திரி
"பும்ரா விஷயத்தில் நான் மிகமிக கவனத்துடன் இருப்பேன். அவருக்கு ஒரே சமயத்தில் 2 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கொடுத்து பின்னர் இடைவெளி கொடுப்பேன். அந்த வகையில் நீங்கள் அவரை 4 போட்டிகளில் விளையாட வைக்கலாம். ஒருவேளை பும்ரா முதல் போட்டியிலேயே அபாரமாக பவுலிங் செய்தால் அவரை நீங்கள் 5 போட்டிகளிலும் பயன்படுத்த விரும்புகிறீர்கள்.
ஆனால் அப்படி விளையாட வைத்தால்தான் அவருடைய உடல் பாதிப்பை சந்திக்கும். எனவே லேசான காயம் இருந்தாலும் ஓய்வு எடுக்கிறேன் என்று வெளிப்படையாக சொல்வதற்கான உரிமை பும்ராவுக்கு வழங்கப்பட வேண்டும். சிராஜ், ஷமி, பும்ரா ஆகிய மூவரும் முழுமையாக விளையாடினால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்" என்று ரவி சாஸ்திரி கூறினார்.
- 27 April 2025 4:31 PM IST
தமிழ்நாட்டில் லிச்சி பழம் சாகுபடி - பிரதமர் மோடி பெருமிதம்
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
லிச்சி பழம் பிகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்டில் தான் விளையும் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் லிச்சி பழ சாகுபடி, தற்போது தென்னிந்தியா மற்றும் ராஜஸ்தானிலும் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வீர அரசு காபி பயிர் விவசாயம் செய்து வந்தார். அவர் கொடைக்கானலில் லிச்சி மரங்களை நட்டார், அவருடைய ஏழாண்டு கால உழைப்பிற்குப் பிறகு தற்போது, இந்த மரங்களால் மகசூல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
லிச்சி பழங்களைப் பயிர் செய்வதில் இவருக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து, மற்ற விவசாயிகளும் உத்வேகம் அடைந்தார்கள். ராஜஸ்தானத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் ராணாவத்தும் லிச்சி பழங்களைப் பயிர் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் உத்வேகம் அளிக்க வல்லவை. நாம் புதியதாக ஒன்றைச் செய்யும் நோக்கத்தை மேற்கொண்டால், இடர்களைத் தாண்டியும் உறுதிப்பாட்டோடு நின்றால், சாத்தியமற்றதைக் கூட சாத்தியமாக்க முடியும் என்று கூறினார்.
- 27 April 2025 4:25 PM IST
அரசியல் சாசனத்தை பாஜக சிதைக்கிறது: ப.சிதம்பரம்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
பாஜக கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சாசனத்தை சிதைக்கிறார்கள்; குடியுரிமை, வக்பு திருத்தச்சட்டம் உள்ளிட்டவை சுத்தியலை வைத்து சிதைப்பதற்கு தான். புல்டோசரை வைத்து சிதைத்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதற்காக மெல்ல சிதைக்கின்றனர்; கொஞ்சம் கொஞ்சமாக உளி, சுத்தியலை வைத்து அரசியல் சாசனத்தை பாஜக சிதைக்கிறது என்று கூறினார்.
- 27 April 2025 4:22 PM IST
எம்.சாண்டு மணல், ஜல்லி விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு
எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றுக்கு ஏற்றப்பட்ட விலையில் இருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, மேலும் சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயித்திடவும் அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- 27 April 2025 4:02 PM IST
கோவையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ரோடு ஷோ
கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார்.
உதயநிதிக்கு விமான நிலையத்தில் இருந்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
இதனிடையே 2ம் நாள் பூத் கமிட்டி கருத்தரங்கிற்கு தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- 27 April 2025 3:26 PM IST
ஈரான் துறைமுக வெடி விபத்து - மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை
வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 750 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெடி விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.