4 நாட்கள் பயணமாக பூட்டான் புறப்பட்டார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

பூட்டான் மன்னர் மற்றும் அந்நாட்டின் பிரதமர் ஆகியோரை நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று பூட்டான் புறப்பட்டுச் சென்றார். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூட்டானுடன் இருதரப்பு கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை குழு அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர்.
பூட்டான் செல்லும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தின் முதல் நாளில் 1765-ம் ஆண்டு நிறுவப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சாங்சென் சோகோர் மடாலயத்திற்கு செல்ல உள்ளார். மேம்பட்ட புத்த மதப் படிப்புகளில் ஈடுபட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட துறவிகள் இங்கு வசிக்கின்றனர்.
மேலும் தனது பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசின் ஆதரவுடன் பூட்டானில் செயல்படுத்தப்படும் பல முக்கிய திட்டங்களை நிர்மலா சீதாராமன் பார்வையிட உள்ளார். அங்குள்ள குரிச்சு நீர்மின் நிலைய அணை மற்றும் மின் உற்பத்தி நிலையம், கியால்சங் அகாடமி, சாங்சென் சோகோர் மடாலயம் மற்றும் புனாகா ட்சோங் ஆகியவை இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் பூட்டான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே ஆகியோரை நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார். இந்தியா-பூடான் பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க, பூட்டான் நிதி மந்திரி லெக்கி டோர்ஜியுடன் சீதாராமன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






