உத்தர பிரதேசம்: 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கொல்கத்தா நகரில் இருந்து இ-மெயில் வந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
ஆக்ரா,
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் ஸ்ரீராம் மற்றும் குளோபல் என 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த 2 பள்ளிகளுக்கும் இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
இதபற்றி உதவி போலீஸ் கமிஷனர் விநாயக் போசாலே கூறும்போது, பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என மிரட்டல் இ-மெயில் வந்ததும், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர், மோப்ப நாய் குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று முழு அளவில் பரிசோதனை செய்தனர்.
எனினும், 2 பள்ளிகளிலும் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என கூறியுள்ளார். இதனால், வழக்கம்போல் கல்வி பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. மாணவர்கள் வழக்கம்போல் படிப்பை தொடர்ந்து வருகின்றனர். இ-மெயில் யாரிடம் இருந்து மற்றும் எந்த இடத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என இணையதள குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் கொல்கத்தா நகரில் இருந்து இ-மெயில் வந்துள்ளது என தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை கண்டறிய தொடர்ந்து நீண்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.






