உத்தரகாண்ட் வெள்ளம்: அரசு வழங்கிய ரூ.5 ஆயிரம் நிவாரணத்தை புறக்கணித்த மக்கள்

Image Courtesy : PTI
அனைத்தையும் இழந்த தங்களுக்கு அரசு வழங்கிய நிவாரணம் அவமானகரமானது என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தாராலி மற்றும் ஹர்ஷில் கிராமங்கள் உள்ளிட்டவை கடுமையான சேதத்தை சந்தித்தன. இந்த சூழலில், முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசு உடனடி உதவியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ₹5 ஆயிரம் காசோலைகளை வழங்கியது.
இந்நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணம், தங்களுக்கு ஏற்பட்ட சேதத்துடன் ஒப்பிடும்போது மிகக்குறைவு என்று அதை புறக்கணித்துள்ளனர். வீடுகள், கடைகள் என அனைத்தையும் இழந்த தங்களுக்கு இந்த உதவி அவமானகரமானது என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
இது உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படும் இடைக்கால உதவி மட்டுமே, முழு சேதத்தையும் மதிப்பிட்டு அறிக்கை தயாரித்த பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்குவோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதற்கிடையில் வெள்ளத்தில் வீடுகளை முற்றிலுமாக இழந்தவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ₹5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி அறிவித்தார்.
நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொலைதூர பகுதிகளில் சிக்கி இருந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். இந்த பேரிடரில் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். மேலும் 49 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.






