துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா


துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா
x
தினத்தந்தி 21 July 2025 9:50 PM IST (Updated: 21 July 2025 10:37 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார். அந்த கடிதத்தில் ஜெகதிப் தன்கர் கூறியிருப்பதாவது;-

"உடல் நலத்தை முன்னிலைப்படுத்தவும், மருத்துவ காரணங்களுக்காகவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி, இந்திய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது பதவிக் காலத்தில் இந்திய ஜனாதிபதி எனக்கு அளித்த உறுதியான ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமருக்கும், மதிப்புமிக்க மந்திரிகள் குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் விலைமதிப்பற்றவை. மேலும் நான் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடம் இருந்தும் நான் பெற்ற அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் அன்பு என்றும் என் நினைவுகளில் நிலைத்திருக்கும்.

நமது மாபெரும் ஜனநாயகத்தில் துணை ஜனாதிபதியாக எனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற அனுபவம் மற்றும் நுண்ணறிவுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். இந்த குறிப்பிடத்தக்க காலகட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அதிவேக வளர்ச்சியையும் நேரில் கண்டு, அதில் பங்கேற்றது எனது பாக்கியம்.

நமது நாட்டின் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தில் பணியாற்றியது ஒரு உண்மையான கவுரவம். இந்த மதிப்புமிக்க அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது, பாரதத்தின் உலகளாவிய எழுச்சி மற்றும் தனித்துவமான சாதனைகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். மேலும் அதன் பிரகாசமான எதிர்காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story