‘பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தலித் மக்கள் மீதான அடக்குமுறை உச்சத்தில் இருக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் கடந்த 1-ந் தேதி நள்ளிரவு ஹரிஓம் வால்மீகி(வயது40) என்ற தலித் பிரிவை சேர்ந்த நபர் கிராமத்தினரால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த கொடூரம் தொடர்பாக 14 பேரை மாநில அரசு கைது செய்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நேற்று அந்த குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதற்காக பதேபூரில் உள்ள வால்மீகியின் வீட்டுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு அவரது தந்தை, சகோதரர் மற்றும் சகோதரி உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய-மாநில பா.ஜ.க. அரசுகளை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
“இந்த ஆட்சியில் தலித் மக்கள் மீதான அடக்குமுறை உச்சத்தில் இருக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு தலித் ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை செய்துள்ளார். வால்மீகியின் குடும்பத்தினர் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மிரட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் நீதி மட்டுமே கேட்கிறார்கள். வேறு எதையும் செய்யவில்லை. அவர்களுக்கு நீதி, மரியாதையை முதல்-மந்திரி வழங்க வேண்டும். குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த குடும்பத்தினர் என்னை சுமார் ½ மணி நேரம் சந்தித்தனர். ஆனால் என்னை சந்திக்கக்கூடாது என காலையில் அவர்களை அரசு அதிகாரிகள் மிரட்டி இருக்கிறார்கள். நானும், காங்கிரஸ் கட்சியும் முடிந்த அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு செய்வோம்.”
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.






