டெல்லியில் காற்றின் தரம் வரும் நாட்களில் மோசமடையும் என எச்சரிக்கை

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், டெல்லியின் காற்றின் தரம் இன்று மீண்டும் கடுமையாக மோசமடைந்தது. நகரத்தின் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு 264 ஆக உயர்ந்து, மோசமான பிரிவில் உறுதியாக இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது. வடக்கு டெல்லியின் நரேலாவில், காற்றின் தரம் கிட்டத்தட்ட 294 ஆக மோசமாக இருந்தது.
இதற்கிடையே, இன்று முதல் 8-ந்தேதி வரை டெல்லியின் காற்ற்றின் தரம் "மிகவும் மோசமாக" இருக்கும் என்று காற்றுத் தர எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. 200 பராமரிப்பு வேன்கள் மூலம் சாலைகளை ஆழமாக சுத்தம் செய்தல், மாசுபடுத்தும் வாகனங்களை சோதனை செய்தல் உள்ளிட்ட மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.






