வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள எம்.பி.க்கள் வலியுறுத்தல்


வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள எம்.பி.க்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 July 2024 12:35 PM IST (Updated: 30 July 2024 12:43 PM IST)
t-max-icont-min-icon

கேரளா நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளது.

புதுடெல்லி,

கேரளத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையின் காரணத்தால் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே இன்று அதிகாலை 2.00 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து 4.30 மணிக்கு மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் சூரல்பாறை, வேளரிமலை, முண்டகயில், பொத்துகலு உள்ளிட்ட பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவிகளை வழங்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திலும் வயநாடு நிலச்சரிவு விவகாரம் இன்று எதிரொலித்தது. வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் எனவும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கேரள எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜேபி நட்டா கூறியதாவது: அவையில் விவாதம் தொடங்கியுள்ளது. உறுப்பினர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். கேரளாவில் நடைபெற்ற இந்த சம்பவம் மொத்த தேசத்தையும் கவலை அடைய செய்துள்ளது. கேரளாவில் மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என நான் உறுதி அளிக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதுதான் தற்போதைக்கு முதன்மை பணியாகும்" என்றார்.


Next Story