ரோகிங்கியா அகதிகள் அந்தமான் கடலில் தூக்கி வீசப்பட்டனரா? சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

ரோகிங்கியா அகதிகள் தொடர்பான மற்றொரு வழக்கு வருகிற ஜூலை 31-ந்தேதி 3 பேர் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் ரோகிங்கியா அகதிகள் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ரோகிங்கியா அகதிகள் 38 பேர் மத்திய அரசால் அழைத்து செல்லப்பட்டு, அந்தமான் கடலில் தூக்கி வீசப்பட்டனர் என அதிர்ச்சியான தகவலை குறிப்பிட்டு உள்ளார்.
இதனை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது. அப்போது, ரோகிங்கியா அகதிகள் தொடர்பான மற்றொரு வழக்கு வருகிற ஜூலை 31-ந்தேதி 3 பேர் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது. அந்த வழக்குடன் சேர்த்து இது விசாரிக்கப்படும் என நீதிபதி சூர்ய காந்த் கூறியுள்ளார்.
தொடர்ந்து, நீதிபதி அமர்வு கூறும்போது, உண்மையில், இந்த மனுவுக்கு ஆதரவு சேர்க்கும் வகையிலான எந்தவித தரவுகளும் இல்லை என குறிப்பிட்டது. நாடு ஒரு கடினம் வாய்ந்த சூழலில் சென்று கொண்டிருக்கும்போது, இதுபோன்ற கற்பனையான கதைகளுடன் நீங்கள் வருகிறீர்கள் என வழக்கறிஞரிடம் நீதிபதி சூர்ய காந்த் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவு சேர்க்கும் வகையிலான சான்றுகள் இல்லையென்றால், நாங்கள் ஒரு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வாக இதனை பரிசீலிப்பது என்பது எங்களுக்கு கடினம் என்று அவர் கூறினார்.






