பாகிஸ்தானுக்கு எதிராக சிறிய அளவிலான போரை மேற்கொள்கிறோம்; பா.ஜ.க. அரசு மீது கார்கே விமர்சனம்

பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் சத்தமின்றி ரத்து செய்யப்பட்டது என கார்கே கூறினார்
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் நேற்று காங்கிரஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாகிஸ்தானுக்கு எதிராக சிறிய அளவிலான போரை மேற்கொள்கிறோம் என்றார்.
பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் இது தொடர்பாக கார்கே பேசியதாவது,
பாகிஸ்தானுக்கு எதிராக நாம் சிறிய அளவிலான போரை மேற்கொள்கிறோம். சீனாவின் மறைமுக உதவியுடன் இந்தியாவை அனைத்து மட்டத்திலும் பாகிஸ்தான் குறைத்து மதிப்பிட்டு வருகிறது. ஏப்ரல் 17ம் தேதி காஷ்மீருக்கு செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. மிகப்பெரிய அளவில் வன்முறை நடக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் சத்தமின்றி ரத்து செய்யப்பட்டது.
வன்முறை, தாக்குதல் நடைபெறலாம் என்று ஏற்கனவே தெரியும் என்றால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு ஏன் எச்சரிக்கவில்லை என்று நான் கேள்வி எழுப்பினேன் . பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் 26 அப்பாவி மக்களின் உயிர்கள் காக்கப்பட்டிருக்கும்' என்றார்.






