கார் வெடிப்பில் நடந்தது என்ன? டெல்லி காவல் ஆணையாளர் விளக்கம் - நேரில் பார்த்தவர்களின் அதிர்ச்சி தகவல்


கார் வெடிப்பில் நடந்தது என்ன? டெல்லி காவல் ஆணையாளர் விளக்கம் - நேரில் பார்த்தவர்களின் அதிர்ச்சி தகவல்
x

அரியானா நம்பர் பிளேட் கொண்ட அந்த காரில் 3 பேர் இருந்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர்.

7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்து உள்ளன. இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காயமடைந்த நபர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். டாக்டர்களிடம் சம்பவம் பற்றி கேட்டறிந்து வருகிறார். அவருடன் உயரதிகாரிகளும் சென்றுள்ளனர். நோயாளிகளிடம் அவர் நலம் விசாரித்து, ஆறுதல் கூறி வருகிறார்.

இந்நிலையில், டெல்லி காவல் ஆணையாளர் சதீஷ் கோல்சா கூறும்போது, ஹுண்டாய் ஐ20 ரக கார் ஒன்று மெதுவாக வந்து போக்குவரத்து சிக்னல் பகுதியில் நின்றது. இதன் பின்னர் அது வெடித்து உள்ளது. அரியானா நம்பர் பிளேட் கொண்ட அந்த காரில் 3 பேர் இருந்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியருகே கவுரி சங்கர் மற்றும் ஜெயின் கோவில்கள் உள்ளன என கூறினார்.

இதுதொடர்பாக அமித்ஷாவிடம் டெல்லி காவல் ஆணையாளர் விளக்கம் அளித்து வருகிறார். எனினும், வெடிபொருட்கள் ஏற்றிய கார் கூட்ட நெரிசலான பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, முன்பே வெடித்து சம்பவம் நடந்துள்ளதா? என்பது தெளிவாக தெரியவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெருக்கடியான சாந்தினி சவுக்கின் செங்கோட்டை பகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்பால், கார்கள் 150 மீட்டர் தொலைவுக்கு சென்று விழுந்தன. அப்போது தெருவிளக்குகள் உடைந்து நொறுங்கி விழுந்தன என அதனை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் கூறினர். பூமி புதைந்து போனது போலவும், உயிரிழக்க போகிறேன் என்பது போலவும் உணர்ந்தேன் என மற்றொருவர் கூறினார்.

என்னுடைய வாழ்வில் இதுபோன்ற பலத்த சத்தம் கேட்டதேயில்லை. வெடித்தபோது, 3 முறை நான் கீழே விழுந்தேன் என கடைக்காரர் ஒருவர் கூறினார். கார்கள் பல சேதமடைந்து கிடந்தன. உடல்கள் பல கிடந்தன. அவற்றை பார்த்து அதிர்ந்து போய் விட்டோம். அதனை விவரிக்கவே முடியாது என கூறினார். இதுதொடர்பாக அமித்ஷாவிடம் டெல்லி காவல் ஆணையாளர் விளக்கம் அளித்து உள்ளார்.

1 More update

Next Story