துபாயில் தேஜஸ் போர் விமான விபத்துக்கு காரணம் என்ன..? வெளியான பரபரப்பு தகவல்

விமான விபத்தில் சிக்கி இமாசலபிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த விமானி வீர மரணம் அடைந்தார்.
துபாயில் தேஜஸ் போர் விமான விபத்துக்கு காரணம் என்ன..? வெளியான பரபரப்பு தகவல்
Published on

துபாய்,

துபாயில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமானம் நிலையம் அருகே உள்ள துபாய் வேர்ல்டு சென்டிரல் பகுதியில் விமான கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று முன்தினம் விமானங்கள் வழக்கம் போல் சாகசத்தில் ஈடுபட்டிருந்தன.

அப்போது இந்தியாவின் தேஜஸ் விமானம் சாகசத்தில் ஈடுபட்டபோது, திடீரென நிலைதடுமாறி தலைக்குப்புற தரையில் விழுந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் இமாசலபிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த விமானி நமன் சியால் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் தேஜஸ் போர் விமான விபத்துக்கான காரணம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வான் சாகசத்தின்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு அதை விமானி, பேரல் ரோல் எனப்படும் ஒரு சுழன்று செல்லும் செயல்முறையை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. இதில் விமானம் திரும்பப்பட்டு மீண்டும் மேலே சென்று தனது முழு சுழற்சியை நிறைவு செய்யும். இது ஒரு சிக்கலான சூழற்சி இல்லை என்றாலும், விமானி சிறிது நேரம் தலைகீழாக இருந்த பின்னர் விமானம் தரையில் மோதியது. விமானம் தலைகீழாக இருந்து மீண்டும் மேலே எழுப்ப வேண்டும். ஆனால் அதுபோன்று நடக்கவில்லை.

விமானம் மீண்டும் மேலே செல்ல முயன்றபோது தரைக்கு மிக அருகில் இருந்திருக்கலாம். மேலும் விமானம் மீண்டும் உயரும் வேகத்தைக் கொண்டிருக்கவில்லை. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். ஒரு போர் விமானம் அதிக வேகத்தில் இத்தகைய சூழற்சிகளை செய்வது மிகவும் கடினம். ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும் திடீரென்று உந்துதல் சக்தியை இழந்திருக்கலாம் அல்லது கட்டுபாட்டு கோளாறு ஏற்பட்டிருக்கலாம். விமான விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது வேறு காரணமா? என்பது முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com