‘பைனாக்குலரில் பார்த்தால் கூட தெரியாத அளவிற்கு எதிர்க்கட்சிகளை துடைத்தெறிவோம்’ - அமித்ஷா பேச்சு

மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. தனது சொந்த பலத்தில் இயங்குகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள சர்ச்கேட் ரெயில் நிலையம் அருகே மாநில பா.ஜ.க.வின் புதிய அலுவலகக் கட்டிடத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. தொண்டர்களிடம் அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
“குடும்ப அரசியல் இனி இந்த நாட்டில் வேலை செய்யாது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். செயல்திறன் அடிப்படையிலான அரசியல்தான் நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும். பிரதமர் மோடி இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். ஒரு எளிய தேநீர் விற்பனையாளரின் வீட்டில் பிறந்தவர், தனது அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்தியாவின் பிரதமராக உயர்ந்துள்ளார். மூன்றாவது முறையாக நாட்டை வழிநடத்தி வருகிறார்.
பா.ஜ.க. ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது. நான் ஒரு பூத் கமிட்டி தலைவராக இருந்து, பின்னர் தேசியத் தலைவராக உயர்ந்தேன். கடின உழைப்பு மற்றும் செயல்திறன் கொண்ட தொண்டர்கள் கட்சியின் படிநிலையில் உயர முடியும். கட்சிக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியாதவர்களால், நாட்டின் ஜனநாயகத்தை ஒருபோதும் பாதுகாக்க முடியாது.
மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க.விற்கு ஊன்றுகோல் தேவையில்லை. மாறாக பா.ஜ.க. தனது சொந்த பலத்தில் இயங்குகிறது. மராட்டியத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும். பைனாக்குலரில் பார்த்தால் கூட தெரியாத அளவிற்கு எதிர்க்கட்சிகளை நாம் துடைத்தெறிவோம். அதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும்.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, கட்சி அலுவலகம் ஒரு கோவில் போன்றது. இங்கிருந்துதான் கட்சித் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. மேலும் கட்சித் தொண்டர்களுக்கு இது ஒரு நடைமுறை பயிற்சிக் களமாகும். பா.ஜ.க. உருவாக்கப்பட்ட 1980-ம் ஆண்டு முதல், நமது நாடு 18 ஆண்டுகளாக பா.ஜ.க. தலைவர்களால் வழிநடத்தப்பட்டு வருகிறது. இது பெருமைக்குரிய விஷயமாகும். அவர்கள் விதைத்த விதைகளால்தான் பா.ஜ.க. இன்று ஒரு ஆலமரமாக மாறியுள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






