மந்திரவாதி என நினைத்து வாலிபர் அடித்துக்கொலை: 6 பேர் கைது

போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 6 பேரையும் கைது செய்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கொத்தி கோயிலா எனும் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சிறுமி பொடியம் கங்கி (வயது 15). இவர் கடந்த 6-ந்தேதி மரணம் அடைந்துவிட்டார். மஞ்சள் காமாலை நோயால் அந்த சிறுமி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் கிராம மக்கள் அதை நம்பவில்லை.
இதே கிராமத்தை சேர்ந்த ராஜு (36) என்பவர் பில்லி, சூனியம் (மந்திரவாதி) செய்ததால்தான் சிறுமி இறந்ததாக அவர்கள் நம்பினர். மேலும் அதே ஊரை சேர்ந்த 2 பேர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்களது நம்பிக்கை இன்னும் அதிகமாகி விட்டது. இதனால் ராஜுவை கொலை செய்ய கிராமத்தினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து சோமைய்யா, பீமய்யா உள்பட 6 பேர் சேர்ந்து சம்பவத்தன்று ராஜுவை கட்டையால் அடித்துக்கொலை செய்தனர். பின்னர் உடலை அவரது வீட்டின் முன்பகுதியில் வீசிவிட்டு 6 பேரும் காட்டுப் பகுதிக்குள் ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 6 பேரையும் கைது செய்தனர்.






