ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்


ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்
x

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் மீட்பு மையத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் மீட்பு மையத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்டுப்பாட்டு மையம்

புதுச்சேரி அரசு ஸ்மார்ட் சிட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பல்வேறு தகவல்கள் கொண்ட தரவு மையம், பேரிடர் மீட்பு, நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு வசதியாக இணைய தள மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள்.

நகர அளவிலான பயன்பாடு மற்றும் ஸ்மார்ட் டேஸ்போர்டு, வாகனங்களை எங்கெங்கு நிறுத்த வேண்டும் என்பது போன்ற தகவல்கள், கண்காணிப்பு கேமரா, காற்று தர கண்காணிப்பு, ஸ்மார்ட் தெரு விளக்குகள், டிஜிட்டல் விளம்பர பலகை, அவசர அழைப்பு பெட்டி, பொது முகவரி அமைப்பு கொண்ட ஸ்மார்ட் கம்பங்கள், ஆப்டிக்கல் பைபர் கேபிள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

சோதனை ஓட்டம்

இந்த வசதிகள் கொண்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் நிறுவுவதற்காக ஒப்பந்தம் முறையாக கோரப்பட்டு தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுப்பாட்டு மையம் இன்று (திங்கட்கிழமை) முதல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் அவசர கால மையத்தில் சோதனை நடைபெற உள்ளது.

இந்த மையத்தின் மூலம் பேரிடர் மீட்பு, நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகள் கண்காணிக்கப்பட உள்ளது. முழுமையாக அனைத்து வசதிகள் கொண்ட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அடுத்த ஆண்டு (2023) ஜூன் மாதம் முதல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மையமானது ஒருங்கிணைத்தல், செயல்படுத்துதல், கண்காணித்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் கட்டளையிடுதல் ஆகியவற்றிற்கான தனி இடமாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story