பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால்

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி

ஆண்டுதோறும் மார்கழி மாதம் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் அதிகாலையில் பெருமாள் கோவில்களில் உள்ள பரமபதம் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது.

புதுச்சேரி காந்திவீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது சொர்க்கவாசல் வழியாக பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் சபாநாயகர் செல்வமும், முதலியார்பேட்டையில் உள்ள பெருமாள் கோவிலில் அமைச்சர் சாய். சரவணன்குமாரும், வன்னிய பெருமாள் கோவிலில் சம்பத் எம்.எல்.ஏ.வும், சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில், எம்.எஸ். அக்ரகாரம் வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில், கொம்பாக்கம் வேங்கடாசலபதி பெருமாள் கோவில், வடுக்குப்பம் வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட புதுச்சேரியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

திரு-பட்டினம்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் வீழி வரதராஜப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காரைக்கால் திரு-பட்டினம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் திருநள்ளாறு நளநாராயணப் பெருமாள், நிரவி கரியமாணிக்கப் பெருமாள் கோவில், வரிச்சிக்குடி வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள புகழ் பெற்ற நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் கோதண்டராமர் பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதால் இந்த ஆண்டு கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சொர்க்க வாசல் திறப்பு

பாகூரில் புகழ்பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் அதிகாலை 5.10 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமண நாராயணா பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் லட்சுமண நாராயணன் பெருமாள் வீதி உலா நடந்தது. இதேபோல் மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான பட்டாபிராமர் கோவில், கிருமாம்பாக்கம் சீனுவாச பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.

திருபுவனையில் உள்ள பழமை வாய்ந்த தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் நமச்சிவாயம், அங்காளன் எம்.எல்.ஏ மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூரணாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் தெய்வநாயக பெருமாள், நோணாங்குப்பம் திரிபுரசுந்தர பெருமாள், சின்ன வீராம்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவில், அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் ரோடு உள்ள வேங்கடேச பெருமாள் கோவில், அரியாங்குப்பம் பார்த்தசாரதி பெருமாள், ஏம்பலம் அருகே உள்ள நல்லாத்தூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.


Next Story